டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க ஆதார் பேமெண்ட் ஆப்: இன்று வெளியாகிறது


இந்தியா முழுக்க டிஜிட்டல் பண பரிமாற்றங்களை மக்கள் அதிகம் பயன்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் இதனை ஊக்குவிக்கும் வகையில் ஆதார் பேமெண்ட் ஆப் இன்று வெளியாகிறது.







புதுடெல்லி:

ஆதார் பேமெண்ட் ஆப் என்பது மத்திய அரசு வெளியிட இருக்கும் புதிய ஆண்ட்ராய்டு செயலி ஆகும். இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றங்களை ஊக்கவிக்க இந்த செயலி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த செயலி மாஸ்டர் கார்டு, விசா போன்ற தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும் சேவை கட்டணங்களை நீக்குகிறது. 

இந்தியாவில் பணமில்லா வர்த்தகத்தை ஏற்படுத்த இந்த செயலி மிகப்பெரிய தூண்டுகோளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலை உருவாக சில ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. ஆதார் பேமெண்ட் செயலி எவ்வாறு வேலை செய்கிறது?

வியாபாரிகள் ஆதார் பேமெண்ட் செயலியை தங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனினை பயோமெட்ரிக் ரீடருடன் இணைக்க வேண்டும். இந்த பயோமெட்ரிக் ரீடர் சந்தையில் 2000 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. வாடிக்கையாளரகள் பணம் செலுத்த, தங்களின் ஆதார் எண் மட்டும் பயன்படுத்தி, பணம் செலுத்தப்பட வேண்டிய வங்கியை தேர்வு செய்ய வேண்டும். இங்கு பயோமெட்ரிக் ஸ்கேன் பண பரிமாற்றத்தில் பாஸ்வேர்டு போன்று செயல்படுகிறது.  

ஆதார் எண் பதிவு செய்ததும், இந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் தானாக தேர்வு செய்யப்படும், இனி வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வங்கியை தேர்வு செய்து கட்டணத்தை செலுத்தலாம். எவ்வித பரிமாற்றத்திற்கும் வாடிக்கையாளர்கள் மற்ற செயலி அல்லது பாஸ்வேர்டையோ உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. 

வங்கி கணக்குகளில் ஆதார் எண் இணைத்திருந்த வாடிக்கையாளர்கள் ஆதார் பேமெண்ட் செயலியின் சேவையை பயன்படுத்த முடியும். இந்தியாவில் இதுவரை மொத்தம் 40 கோடி ஆதார் எண்கள் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் மார்ச் 2017க்குள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.