கூகுள் பிளே ஸ்டோரில் போலி பீம் ஆப்: கண்டுபிடிப்பது எப்படி?


மத்திய அரசு சில வாரங்களுக்கு முன் வெளியிட்ட பீம் செயலியை போன்றே அதிகளவு போலி செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வழி செய்யும் புதிய 'பீம்' செயலியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த செயலி வெளியான நாள் முதல் இன்று வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் முப்பது லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளை இந்த செயலி தற்சமயம் வரை பெற்றுள்ளது. 

அதிகப்படியான டவுன்லோடுகளை பெற்று வரும் பீம் செயலியை போன்றே அதிகளவு போலி செயலிகளும் கூகுள் பிளே ஸ்டோரில் கண்டறியப்பட்டுள்ளன. கூகுள் பிளே ஸ்டோரில் போலி செயலிகள் நிறையவே இருக்கின்றன. பிரபலமான செயலிகளின் போலி பதிப்புகள் கூகுள் பிளே ஸ்டோரில் அதிகமாக கிடைப்பதை போன்றே மத்திய அரசின் பீம் செயலியின் பல்வேறு போலி பதிப்புகளும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. 

இங்கு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பீம் செயலியை கண்டறிவது எப்படி என்பதை பார்ப்போம்..

* கூகுள் பிளே ஸ்டோரில் "BHIM app" என டைப் செய்தாலே மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செயலி முதலிடத்தில் காணப்படுகிறது. இதனை தொடர்ந்தே போலி செயலிகள் பின் தொடர்கின்றன. 

* மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பீம் செயலியை தேசிய பணம் செலுத்தும் நிறுவனம் (National Payments Corporation of India) தயாரித்துள்ளது. 

* பீம் செயலியின் சின்னம் (லோகோ) தேசிய கொடியின் நிறத்தை சார்ந்து இரண்டு முக்கோணங்களை கொண்டுள்ளது. இந்த சின்னத்தில் எவ்வித எழுத்துக்களும் இடம் பெறவில்லை. 

* மத்திய அரசு வெளியிட்டுள்ள பீம் செயலியின் பெயர் கூகுள் பிளே ஸ்டோரில் வெறும் "BHIM" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை வைத்து கூகுள் பிளே ஸ்டோரில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பீம் செயலியை கண்டறிந்து கொள்ளலாம்.

No comments:

Powered by Blogger.